நபிமார்களின் நற்குணமும் நாமும் ஆதம் (அலை)

அவுஜுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்

நபிமார்களின் நற்குணமும் நாமும்

ஆதம் (அலை)

 

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிகழட்டுமாக!

யாருக்கு உள்ளம் உள்ளதோ, அல்லது கவனமாகச் செவியுறுகிறாரோ அவருக்கு இதில் படிப்பினை உள்ளது. (குர்ஆன் 50:37)

முஸ்லிம்களாக வாழக்கூடிய நாம் நம்மை பரிசுத்தமானவர்களாக காட்டிக்கொள்கிறோம் ஆனால் அந்தரங்கத்தில் நாம் எப்படிப்பட்ட கேடுகெட்டவர்கள் என்பதை இறைவன்தான் அறிவான். இந்த கருத்து யாரையும் புண்படுத்தும் நோக்கத்திற்காகவோ அல்லது மறைமுகமாக சீண்டவோ அல்ல யாராக இருந்தாலும் நானாக இருந்தாலும் அந்தரங்கமான விஷயத்தில் அடிசருகக்கூடிய வாய்ப்பு இருந்தால் சரிகிவிடக் கூடியவர்களே ஆம் நாம் மூமின்கள் போன்று பகல் வேஷம் போட்டு ஊரை ஏமாற்ற நினைக்கலாம் ஆனால் இறைவனை ஏமாற்ற இயலாது என்பதற்காக எச்சரிக்கை பதிவே இக்கட்டுரையாகும்.

நம் வருங்கால சந்ததிகளாவது ஒழுக்கமுள்ள கண்ணியமுள்ள ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து நமக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்பதற்காக வரையப்பட்டதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். வாருங்கள் சத்திய சீலர்களும் உத்தம நபிமார்களும் எந்த அளவுக்கு ஒழுக்கமானவர்களாக பரிசுத்தமானவர்களாக திகழ்ந்தார்கள் என்பதை இங்கு ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.

நபி ஆதம் (அலை) அவர்களின் ஒழுக்கம்:

நபி ஆதம் (அலை) அவர்கள் மனித வர்க்கத்தின் முதலில் படைப்பாவார் அவரை இறைவன் களிமண்ணால் படைத்து தன் உயிரை அவருக்குள் ஊதினான் பின்னர் ”குன்” ஆகுக என்றதும் அவர் மனிதராக ஆதமாக படைக்கப்பட்டார்.

எந்த கண்ணும் பார்த்திராத, எந்த காதுகளும் கேட்டிராத இறைவனிடம் நெருங்கிப் பழகிய பாக்கியம் பெற்ற ஒரே மனிதர் நபி ஆதம் (அலை) ஆவார் இந்த ஆதம் நபிக்கு இறைவன் ஒரு துணையை அவரிடமிருந்தே படைத்துக் கொடுத்தான் அவர்தான் அவரது துணைவியாரான ஹவ்வா (அலை) ஆவார்கள்.

முதல் மனிதர் நபி ஆதம் (அலை) தனது துணைவியாருடன் சொர்க்கச் சோலைகளில் வாழ்ந்து வந்தார் அப்படிப்பட்ட இன்பமயமான சூழ்நிலையில் இறைவன் இவரை இப்லீஸைக் கொண்டு சோதித்தான் இதோ அந்த சோதனை

“ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்தச் சொர்க்கத்தில் தங்குங்கள்! விரும்பியவாறு இருவரும் உண்ணுங்கள்! இந்த மரத்தை நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) இருவரும் அநீதி இழைத்தவர்களாகி விடுவீர்கள்” (என்றும் கூறினான்) (குர்ஆன் 7:19)

ஆனால் ஆதம் (அலை) அவர்களை அவர்களது மனைவியின் மூலம் ஷைத்தான் வழிகெடுத்தான் அவர் இறைவனின் வார்த்தையை மீறிவிட்டார் இதோ ஆதாரம்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) ஆதாரம் நூல்: புகாரி 3330)

ஆதம் நபியின் பாவம் என்ன?

ஆண் வர்க்கத்தை சார்ந்த நபி ஆதம் (அலை) அவர்களுக்கு துணையாக இருந்தவர் பெண் வர்க்கத்தை சார்ந்த முதல் பெண் ஹவ்வா (அலை) ஆவார்கள் இவர் வேறு யாருமில்லை அவரது மனைவியாவார் இதை குர்ஆன் வசனம் உறுதிபடுத்துகிறது.

ஒரு ஆணுக்கு இரண்டு பெண்கள் இருந்து ஒரு பெண் மனைவியாகவும் மற்றொரு பெண் தோழியாகவும் இருந்தால் மனைவியை விட்டு தோழியிடம் இணங்கி மயங்கும் நேரத்தில் விபச்சாரம் நிகழ வாய்ப்பு உள்ளது ஆனால் ஆதம் மற்றும் ஹவ்வா இருவருக்கும் மத்தியில் எந்த பெண்ணோ ஆணோ இல்லை சுவர்க்கத்தில் இவர்கள் இருவர் மட்டும்தான் மனித வர்க்கமாக இருந்தார்கள் ஆக சுவர்கத்தில் ஆதம் ஹவ்வா வாழ்க்கையில் விபச்சாரம் அறவே இல்லை மேலும் சுவர்க்கத்தில் விபச்சாரத்திற்கு வாய்ப்புகளே இல்லை இது நிதர்சன உண்மை. அப்படியானால் என்ன பாவம் செய்தார்கள்?

“ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்தச் சொர்க்கத்தில் தங்குங்கள்! விரும்பியவாறு இருவரும் உண்ணுங்கள்! இந்த மரத்தை நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) இருவரும் அநீதி இழைத்தவர்களாகி விடுவீர்கள்” (என்றும் கூறினான்) (குர்ஆன் 7:19)

எனவே ஆதம் நபி விபச்சாரத்தை செய்யவில்லை மாறாக இறைவனின் வார்த்தைக்கு கட்டுப்படாமல் ஒரு மரத்தை நெருங்கினார் மேலும் அந்த மரத்தை தாமாகவும் நெருங்கவில்லை தன் அழகிய மனைவியின் அன்பான ஆசை வார்த்தைகளுக்கும் வேண்டுகோளுக்கும் கட்டுப்பட்டு அவா் மீது அன்பு வைத்து அந்த மரத்தை நெருங்கினார்.

ஆதம் நபி நாடியிருந்தால் இறைவனின் வாக்கிற்கு கட்டுப்பட்டிருக்கலாம் எனினும் தன்னைத் தவிர வேறு துணையே இல்லாத யாரிடமும் நட்புக் கொள்ள இயலாத அநாதையான தன் மனைவியை உதாசீணப்படுத்த அவா்  நாடவில்லை இருப்பினும் இறைவன் பண்புகளை அறிந்துவைத்துள்ள ஆதம் நபி இறைவன் மன்னிப்பான் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தன் மனைவியின் அன்புக் கட்டளைக்கு வார்த்தைக்கு கட்டுப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரலாம் இவ்வாறு மனைவியின் மீது காதல் கொண்டு சற்று இறங்கி வருவது மனித இயல்பே தவிர வேறொன்றும் இல்லை அந்த குணத்தைக் கூட இறைவன்தான் கொடுத்தான் சோதிப்பதற்காகவே.

ஆதம் நபி நாடியிருந்தால் தமது மனைவியை வெறுத்திருக்கலாம் ஆனால் அவர் தமது மனைவியை மிகவும் நேசித்து காதல் வயப்பட்ட நிலையில் அவரது அன்புக்கட்டளைக்கு மயங்கினார் என்று கருதும் போது அவர் எந்த அளவுக்கு தன் மனைவியின் மீது பாசம் நேசம் பரிவு வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்துப் பாருங்கள் இன்றைக்கு நாம் இவ்வாறு செய்கிறோமா?

ஆதம் நபியின் வெட்கம்

இன்றைக்கு மனிதர்களாக, முஸ்லிம்களாக அதிலும் தலைசிறந்த தாயிக்களாக இருக்கக்கூடிய நாம் ஒரு பாவத்தை செய்துவிட்டால் வெட்கித் தலைகுணிகிறோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

விபச்சாரத்தை செய்துவிட்டு மேடைகளில் முகத்தை காட்டுகிறோம், முகநூலில் வெட்கமில்லாமல் தவறுகளுக்கு தார்மீக பொறுப்பேற்க மனமில்லாமல் நான் அப்பளுக்கற்றவன், நான் பரிசுத்தமானவன் நான் சிறிய பாவத்தை செய்தேன் என்று தன் பாவங்களை தானே பகிரங்கப்படுத்தி தன்னுடைய கண்ணியத்தை தானே கெடுத்துக் கொள்வதைப் பார்க்கிறோம் ஆனால் நபி ஆதம் (அலை) அவர்கள் விபச்சாரம் செய்தார்களா? என்றால் இல்லை, பொய் சொன்னார்களா? என்றால் இல்லை மாறாக இறைவனுடைய சொல்லிற்கு கட்டுப்படாமல் அந்த மரத்தை நெருங்கிவிட்டார் அதன் கனியை புசித்துவிட்டார் அதுதான் அந்த பாவம் இதோ ஆதாரம்

அவ்விருவரையும் ஏமாற்றி (தரம்) தாழ்த்தினான். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது அவர்களின் வெட்கத்தலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர். அவர்களை அவர்களின் இறைவன் அழைத்து “இம்மரத்தை நான் உங்களுக்குத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறவில்லையா?” எனக் கேட்டான். (குர்ஆன் 7:22)

ஆதம் நபி அல்லாஹ்வின் வார்த்தைக்கு கட்டுப்படமால் போன காரணத்தினால் வெட்கப்பட்டு பயந்து மறைந்து வாழ்கிறார் ஆனால் இன்று நாமோ வெட்கமில்லாமல் முகநூலில் நேரலையில் வாழ்கிறோம்!

ஆதம் நபியும் அவரது துணைவியாரும் நிர்வாண கோலத்தில் தங்களைக் கண்டவுடன் கணவன் மனைவிக்கு மத்தியில் இந்த வெட்க உணர்வு அவர்களின் இறையச்சத்தை பறைசாற்றுகிறது இழைகளால் தழைகளால் தங்கள் மர்மஸ்தானங்களை மறைத்துக் கொள்கிறார்கள் இறைவனின் முன் தாங்கள் இருவரும் சிறுமைப்பட்டு கதிகலங்கி செய்வதறியாது தகித்து நிற்கிறார்கள் எனினும் தங்கள் குற்றத்தை மறைக்க அவர்கள் நாடவில்லை மாறாக கீழ்க்கண்டவாறு இறைவனிடம் தங்களை சரணடையச்செய்து அடிபணிந்து பாவ மன்னிப்பு கோருகிறார்கள்!

“எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கிழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நட்டமடைந்தோராவோம்” என்று அவ்விருவரும் கூறினர். (குர்ஆன் 7:23)

இறைவனின் முன் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்ட இந்த நற்குணம் நம்மிடம் உள்ளதா? சிந்தியுங்கள்! அதுமட்டுமா? எங்கள் இறைவா என்று அழுது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டதாக இறைவனிடம் பகிரங்க மன்னிப்பு கோருகிறார்கள். மேலும் இறைவன் அருள்புரியவில்லை எனில் தாங்கள் இருவரும் நஷ்டவாளிகளாக ஆக்கப்படுவோம் என்று கதறுகிறார்கள் இந்த கதறல் நம்மிடம் உள்ளதா? சிந்திக்க வேண்டாமா?

அடுத்தவர்களது மனைவிகளுடன் உள்ளாசமாக வாழக்கூடிய கேடு கெட்ட மனிதர்கள் நம் உயிரினும் மேலான தந்தை ஆதிபிதா ஆதம் (அலை) வழிமுறையை பின்பற்றுகிறார்களா?

அல்லாஹ் அடிக்கடி குர்ஆனில் சிந்தியுங்கள் என்றும் நபிமார்களிடம் படிப்பினை உள்ளது என்றும் கண்ணியமாக கூறுகிறானே இந்த வார்த்தைக்காவது இந்த கேடு கெட்ட மனிதர்கள் சிந்திக்கிறார்களா? அல்லது தான்தோன்றித்தனமான வில்லத்தன நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? இவர்கள் நபிவழியை பின்பற்றுகிறார்களா? சகோதர சகோதரிகளே நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!

ஆதம் நபியின் நற்குணம்

ஆதம் நபி மனித குலத்திற்கு தந்தையாவார் ஏனெனில் அவர்தான் முதல் மனிதர் என்ற அந்தஸ்தையும் இறைவனிடம் நேருக்கு நேர் உறையாடி அவனுடைய அன்பை பெற்றவரும் ஆவார்கள் இப்படிப்பட்ட ஒரு நபியிடம் இவரது சந்ததியில் ஒருவரும் பிற்காலத்தில் நபியாக தோன்றியவருமான நபி மூஸா (அலை) அவர்கள் மறுமையில் வாதிடுவார்கள் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நபி ஆதம் (அலை) அவர்கள் மென்மையான போக்கையே கடைபிடிப்பார்கள் இதோ அதற்குரிய அழகான ஆதாரம் கீழே தொகுத்து வழங்குகிறோம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ 
மூஸா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வாதிட்டார்கள். அப்போது உங்கள் பாவத்தின் காரணமாக மக்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களைத் துர்பாக்கியசாலிகளாய் ஆக்கியவர்கள் நீங்கள் தாமே!’ என்று மூஸா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் கேட்டார்கள். (பதிலுக்கு) ஆதம்(அலை) அவர்கள் ‘மூஸா! தன் தூதுச் செய்திகளை (மக்களிடம்) எடுத்துரைப்பதற்காகவும் தன்னுடன் உரையாடுவதற்காகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்த மனிதர் நீங்கள் தாமே? என்னைப் படைப்பதற்கு முன்பே என் மீது அல்லாஹ் ‘எழுதிவிட்ட’ அல்லது ‘விதித்துவிட்ட ‘ஒரு விஷயத்திற்காகவா என்னை நீங்கள் குறை கூறுகிறிர்கள்’ என்று திருப்பிக் கேட்டார்கள். இதைக் கூறிவிட்டு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘ஆதம் (அலை) அவர்கள் (தம் இந்த பதிலால்) மூஸா(அலை) அவர்களைத் தோற்கடித்துவிட்டார்கள்’ என்று கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி 4738

ஆதம் நபி நாடியிருந்தால் மூஸாவே நான் பாவம் செய்யும் போது நீ உடனிருந்தாயா? என்று கேட்டிருக்கலாம் அவ்வாறு கேட்பதற்கு முழு உரிமையும் தகுதியும் அவருக்கு உண்டு அவ்வாறு கடிந்துக் கொண்டிருந்தால் மூஸா நபி நிலை குழைந்து வருந்தியிருப்பார் ஆனால் இப்படிப்பட்ட கடினமான வார்த்தையைக் கூட அவர் பேசமாட்டார் மாறாக கண்ணியமான முறையில் தன் தவறை பகிரங்கமாக ஒத்துக் கொண்டு இறைவன் விதித்த விதியின் மீது அவர் கண்கலங்கிவிடுகிறார்! ஸுபுஹானல்லாஹ் இந்த கண்ணியமான வார்த்தை நம்மிடம் உள்ளதா? சிந்திக்க மாட்டீர்களா?

ஆதம் நபியின் இறையச்சம்!

இறையச்சம் என்ற ஒரு உணர்வு இருந்தால் அதை ஆதம் நபியிடம்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது அந்த அளவுக்கு இறைவனின் மீது அன்பு கலந்த பயத்தை கொண்டுள்ளார். அதற்குரிய ஆதாரம் இதோ:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: 
மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, ‘(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)’ என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வந்து, ‘நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்’ என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். ‘நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவராவார்’ என்று சொல்வார்கள்.
(ஹதீஸ் சுருக்கம்) அறிவிப்பவர் அனஸ் (ரலி) ஆதாரம்: நூல் புகாரி 4776

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ 
இறைநம்பிக்கையாளர்கள் மறுமை நாளில் ஒன்று திரட்டப்படுவார்கள். அப்போது அவர்கள் ‘(அதிபயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நாம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் கேட்டுக்கொண்டால் என்ன?’ என்று பேசிக்கொள்வார்கள். அதன்படி அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் சென்று அவர்களிடம் ‘நீங்கள் மனிதர்களின் தந்தை ஆதம் ஆவிர்; அல்லாஹ் உங்களைத் தன்னுடைய கரத்தால் படைத்தான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்பித்தான். எனவே, எங்கள் இறைவன் எங்களை (இந்தச் சோதனையிலிருந்து) விடுவிக்க எங்களுக்காக அவனிடம் பரிந்துரை செய்யுங்கள்’ என்று கேட்டுக்கொள்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று அவர்களிடம் சொல்லி, தம் செய்ததவற்றை அவர்களிடம் எடுத்துரைப்பார்கள்
அறிவிப்பவர்:அனஸ்(ரலி) (ஆதாரம்: நூல் புகாரி 7516)

இன்றைக்கு நாம் பார்க்கிறோம் பகிரங்கமாக பாவம் செய்துவிட்ட எத்தனையோ மனிதர்கள் தாயிக்கள் தங்களை பாவிகளாக காட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக சாட்சியங்களை மறைக்கிறார்கள் மேலும் தங்கள் பகிரங்கப்பட்ட பாவங்களை மூடி மறைக்க தனிக் கட்சி துவங்குவதைப் போன்று ஜமாஅத்களை துவக்கி நற்பெயரை சம்பாதிக்க துணிகிறார்கள் இவர்கள் இறையச்சமுடையவர்களாக இருந்திருந்தால் இவ்வாறு செய்வார்களா? சிந்திப்பாருங்கள்!

ஒரு பாவியாக உள்ள மனிதன் இறையச்சமுள்ளவனாக இருந்தால் அவனிடம் மக்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்க அவரது தோழர்கள் முன்வந்தால் என்ன செய்ய வேண்டும்? அய்யா! நானே பாவியாகிவிட்டேன் எனக்கே பாவத்திற்கான பரிகாரம் தேட நேரமில்லை எனவே நீங்கள் அமைப்பை உருவாக்குங்கள் நான் உங்கள் போதனைகளை செவியுற்று நேர்வழியை நோக்கி தலை சாய்க்கிறேன் என்னைப் போன்ற பாவிகள் மக்களை வழிநடத்தினால் மக்கள் வழிகெட்டுவிடுவார்கள் தயவு செய்து என்னை தனியாக விட்டுவிடுங்கள் என்று கூறவேண்டும் இவ்வாறுதான் தீன்குல மக்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் பற்றுள்ள மனிதரின் இறையச்சம் இருக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் வெற்றி பெருவார்கள்! ஆனால் இன்றைய காலகட்டத்தில் இவ்வாறு நடக்கிறதா? சிந்திக்கமாட்டீர்களா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபச்சாரம் புரிகின்றவன் விபச்சாரம் புரியும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான்.(திருடன்) திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான்.(மது அருந்துகின்றவன்) மது அருந்தும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான்.மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோரல் பின்னர்தான் ஏற்படுகிறது. 
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: நூல்:முஸ்லிம் 104)

முடிவுரை!

கண்ணியமிக்க சகோதர சகோதரிகளே! நம் ஆதிபிதா ஆதம் (அலை) அவர்கள்

  1. பொய் பேசவில்லை
  2. உண்மையை மறைக்கவில்லை
  3. மனைவியின் மீது பேரண்பு கொண்டவர்களாக திகழ்ந்தார்கள்
  4. பாவம் செய்தபின்னரும் மனைவியை வெறுத்து ஒதுக்கவில்லை
  5. மனைவிக்கு துரோகம் செய்யவில்லை
  6. விபச்சாரத்தில் ஈடுபடவில்லை
  7. முதல் மனிதர் என்ற தற்பெருமை கொள்ளவில்லை
  8. இறையச்சமுடையோராக வாழ்ந்தார்கள்
  9. இறைவனுக்கு இணைவைக்கவில்லை
  10. பாவமன்னிப்பு கோரி வாழ்ந்தார்கள்

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! விபச்சாரத்தை நெருங்காதீர்கள் அது பாவமான காரியமாக மட்டுமில்லாமல் கண்ணியத்தையும் நற்பெயரையும் குழிதோண்டி புதைக்கும் காரியமாகவும் உள்ளது எனவேதான் ஒருவன் விபச்சாரம் செய்துவிட்டால் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தல் கல்லெரி தண்டனை விதிக்கப்பட்டது காரணம் விபச்சாரம் புரிந்தது அம்பலமானால் அவனால் எஞ்சியுள்ள வாழ்க்கையில் சுகமாக வாழ இயலாது தினம்தினம் நொந்து நோயாளியாகவே வாழ்வான்!

மேலும் ஒருவன் திருடினால், கொலை செய்துவிட்டால், மது அருந்திவிட்டால் பிற்காலத்தில் குர்ஆன் மற்றும் நபிவழியை கற்றுணர்ந்து தன் வாழ்க்கையில் உத்தமனாக வாழ்ந்து காட்ட இயலும் அவ்வாறு திருந்தி நல்ல மனிதனாக சமுதாயத்தில் வாழும்போது மக்கள் அவனுடைய நடவடிக்கைகளை கண்டு அவனுடைய பாவங்களை மறந்துவிடுவார்கள் ஆனால் விபச்சாரம் போன்ற அயோக்கியத்தனமான பாவத்தை செய்துவிட்டு திருந்தி வாழ நினைத்தால் அவர் என்னத்தான் குர்ஆன் நபிவழியை பின்பற்றி பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்தாலும் ஒருகாலத்தல் விபச்சாரகன்தானே என்று தூற்றித்தான் செல்வார்கள் அவனை நம்பமாட்டார்கள்!

அறிந்துக் கொள்க! கொலை செய்வதைக் காட்டிலும் விபச்சாரம் புரிவது மிகப்பெரிய ஈனச் செயலாகும் இதிலிருந்து நாம் அனைவரும் பாதுகாப்பு பெற வல்ல ரஹ்மானை பிரார்த்திப்போமாக!

(பாவமன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை தமது இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (குர்ஆன் 2:37)

நபி ஆதம் (அலை) அவர்களின் துவா என்னும் பிரார்த்தனை இதோ

“எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கிழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நட்டமடைந்தோராவோம்” என்று அவ்விருவரும் கூறினர். (குர்ஆன் 7:23)

ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம். (குர்ஆன் 7:27)

நமது நன்மைக்கு இல்லையென்றாலும் நம் சமுதாய நன்மைக்காக நமக்கு பின்வரும் சந்ததிகளின் மார்க்க அறிவுக்காக உண்மையை உணர்ந்து நாம் அனைவரும் உண்மையின் பக்கம் அருள்மறை குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் பக்கம் தலை சாய்ப்போமா?

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (அல்குர்ஆன் 16:125)

رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏ ،وَاجْعَلْ لِّىْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَۙ‏ ،وَاجْعَلْنِىْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِۙ‏ ،وَلَا تُخْزِنِىْ يَوْمَ يُبْعَثُوْنَۙ‏

இறைவனேநீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”(அல்குர்ஆன் 26:83-85, 87)

அல்ஹம்துலில்லாஹ்(புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே)

அல்லாஹு அக்பர்! (அவன் மிகப் பெரியவன்)

ஸுபுஹானல்லாஹ்! (அவன் தூயவன்)

அன்புடன்

சிராஜ் அப்துல்லாஹ்

 

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.